இந்த ஆண்டு வினாத்தாள் அடங்கிய உறைகள் புதிய முறையில் பேக்கிங் செய்யப்பட உள்ளன. அதன்படி, வினாத்தாள் அடங்கிய மந்தண (ரகசிய) உறை, உறுதியான பிளாஸ்டிக் உறைக்குள் இடப்பட்டிருக்கும். பிளாஸ்டிக் உறைமேல் தேர்வுத் தேதி, பாடத்தின் பெயர் போன்ற விவரங்களும், அதே விவரங்கள் உள்ளிருக்கும் மந்தண உறை மேலும் ஒட்டப்பட்டிருக்கும்.
வெளிப்புற பிளாஸ்டிக் உறை வழியாகப் பார்க்கும்போது, உள்ளிருக்கும் மந்தண உறையில் உள்ள விவரங்கள் தெளிவாகத் தெரியும் வண்ணம் இருக்கும்.
வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் பிளாஸ்டிக் உறையினைத் திறக்காமல், வெளிப்புற பிளாஸ்டிக் உறைமேல் இடம்பெற்றுள்ள விவரங்களும், உள்ளிருக்கும் மந்தண உறை மேல் உள்ள விவரங்களும் ஒன்றுதானா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
மாறுபாடான விவரங்கள் இருப்பின், அதனை உடனே தேர்வுத் துறைக்குத் தெரிவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு தேர்வு நாளுக்கும் உரிய வினாத்தாள்கள் அடங்கிய மந்தணக் கட்டுகளை தேர்வு நாளன்று துறை அலுவலரிடம் ஒப்படைக்கும்போது இரு உறைகளின்மேல் உள்ள விவரங்களும் ஒன்றுதான் என்பதை துறை அலுவலர் உறுதிசெய்துகொண்டு பெற்றுக்கொள்ள வேண்டும்.
வெளிப்புற பிளாஸ்டிக் உறையினை தேர்வு மையத்தில் மட்டுமே உரிய நேரத்தில் திறக்க வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.