புதிய திட்டம் தொடங்கப்பட்டது
பி.எப் தொகையை எஸ்எம்எஸ்சில் அறியலாம்
நாகர்கோவில் : தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (இ.பி.எப்)
நடவடிக்கைகள் முழுவதும் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்களிடம்
பிடித்தம் செய்யப்படுகின்ற தொகையின் அடிப்படையிலான கணக்கில் இருப்பு தொகையை
தொழிலாளர்கள் நேரடியாக அறிந்து கொள்ளும் வகையில் பிஎப் அலுவலகங்கள்
நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடந்த 1.7.2011 அன்று பரிசோதனை அடிப்படையில்
துவக்கப்பட்ட இந்த திட்டம் நாடு முழுவதும் 119 இ.பி.எப் அலுவலகங்களில்
தற்போது முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக இணையதளத்தில் மொபைல்போன் எண்ணை பதிவு செய்து எஸ்எம்எஸ் வாயிலாக ஒவ்வொரு தொழிலாளியும் விபரங்களை பெற முடியும்.
www.epfindia.com/MembBal.html என்ற இணையதள முகவரிக்கு சென்று, முதலில் மாநிலத்தையும், தொடர்ந்து மண்டலத்தையும் தேர்வு செய்ய வேண்டும்.
நாகர்கோவில்
அலுவலகத்தில் ஒருவர் தனது பிஎப் கணக்கு விபரத்தை அறிய நாகர்கோவில்
அலுவலகத்திற்கான பகுதியில் கிளிக் செய்தால் அதில் எம்.டி/என்கேஎல் என்று
ஆங்கிலத்தில் குறிப்பிட்டிருக்கும். அதன் அருகே தொடர்ந்து அடுத்தடுத்து
வரும் 3 கட்டங்களை நிரப்ப வேண்டும்.
முதல் கட்டம் 7 இலக்க
‘எஸ்டாபிளிஷ்மென்ட்‘ கோடு எண்ணும், அடுத்து 3 இலக்க ‘எக்ஸ்டன்ஸன்‘ எண்ணும்,
அடுத்து 7 இலக்க ‘அக்கவுண்ட்‘ எண்ணும் பதிவு செய்யப்பட வேண்டும். இந்த
எண்கள் பி.எப் சிலிப்பில் உள்ளன. தொடர்ந்து கீழ் உள்ள கட்டங்களில் பெயர்
மற்றும் எஸ்எம்எஸ் பெற வேண்டிய மொபைல் எண்ணையும் பதிவு செய்ய வேண்டும்.
பதிவு பூர்த்தி செய்யப்பட்ட சிறிது நேரத்தில் மொபைல்போனுக்கு எஸ்எம்எஸ்
வந்துவிடும்.
அதில் இபிஎப் கணக்கு எண்ணுடன் இருப்பு தொகை விபரங்கள்
முழுமையாக தெரிவிக்கப்பட்டிருக்கும். ஒருமுறை மொபைல்போன் எண் பதிவு
செய்யப்பட்டுவிட்டால் அடுத்து இந்த கணக்கில் நடைபெறும் பண பரிவர்த்தனைகள்
எஸ்எம்எஸ் வாயிலாக நமக்கு வந்து சேரும். 30 லட்சத்து 12,181 பேர் தங்கள்
மொபைல்போன் எண்ணை பதிவு செய்து கணக்கு விபரங்களை பெற்றுள்ளனர்.