லோக்சபா தேர்தலை மனதில் கொண்டு, பள்ளி
கல்வித்துறையில், 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கும்
விழாவை, முதல்வர் தலைமையில், விரைவில் பிரமாண்டமாக நடத்த, கல்வித்துறை,
அதிரடி முடிவு செய்துள்ளது.குறைவான எண்ணிக்கையிலான பணி நியமனம், அமைதியாக,
கலந்தாய்வு மூலம் நடத்தப்படுகிறது. ஆனால், அதிக எண்ணிக்கையிலான பணி நியமனம்
என்றால், முதல்வர் பங்கேற்கும் வகையில், பிரமாண்டமாக விழா
நடத்தப்படுகிறது.
பணி நியமன உத்தரவு:கடந்த, 2012, டிசம்பரில், 20
ஆயிரம் ஆசிரியர்களுக்கு, பணி நியமன உத்தரவு வழங்கும் விழா, சென்னை,
ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், விமரிசையாக நடந்தது. இதில், முதல்வர்
பங்கேற்று, பணி நியமன உத்தரவுகளை வழங்கினார்.அதன்பின், மீண்டும் பெரிய
அளவிலான பணி நியமனம், விரைவில் நடக்க உள்ளது. அரசு மேல்நிலை பள்ளிகளில்,
2,881 முதுகலை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு மூலம், 12 ஆயிரம்,
பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியரும், தேர்வு செய்யப்பட உள்ளனர். விரைவில்,
15 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதால்,
இந்நிகழ்ச்சியை, சாதாரண முறையில் நடத்தாமல், முதல்வர் தலைமையில், 2012ஐ
போல், பிரமாண்டமாக நடத்த, கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக, துறை
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.லோக்சபா தேர்தலை மனதில்கொண்டு, புதிய ஆசிரியர்
நியமனத்தை, விரைந்து நடத்த,தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டால், தேர்தல் விதிமுறைகள், அமலுக்கு
வந்துவிடும்.அதன்பின், பணி நியமன உத்தரவு வழங்கும் விழாவை நடத்த முடியாத
நிலை ஏற்படலாம். பிப்ரவரி முதல் வாரத்தில், தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம்.
எனவே, அதற்கு முன்னதாக, ஆசிரியர் நியமன விழாவை நடத்தி முடிக்க, தமிழக அரசு
திட்டமிட்டுள்ளது.
வழக்கு:ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,)
தொடர்பாகவும், முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பாகவும், சென்னை,
உயர்நீதிமன்றத்தில், வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளை, விரைந்து முடித்து,
இறுதி தேர்வு பட்டியலை வெளியிடவும், ஏற் பாடுகள் நடந்து
வருகின்றன.டி.இ.டி., தேர்வு முடிவு வெளியான நிலையில், இன்னும், சான்றிதழ்
சரி பார்ப்பு நடக்கவில்லை. அதேபோல், முதுகலைதமிழ் பாடத்திற்கு மட்டும்,
இறுதி தேர்வு பட்டியல், வெளியானது. மற்ற பாடங்களுக்கு, வழக்கு காரணமாக,
இறுதி பட்டியல் வெளியாகவில்லை.இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரம்
கூறுகையில், 'அனைத்து வழக்குகளும், ஒன்றாக விசாரிக்கப்படுவதால், விரைவில்,
தீர்ப்பு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. முடிவு வந்துவிட்டால், ஒரே
வாரத்தில், டி.இ.டி., தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தி, அடுத்த ஒரு
வாரத்தில், இறுதி தேர்வு பட்டியலை வெளியிட்டு விடுவோம்' என, தெரிவித்தன.
No comments:
Post a Comment