welcome message

Hearty Welcomes You

Always visit my site. If you want any news sms ON oommurugan to 9003798003

Flash News

Flash News:

popup.

Tuesday 26 May 2015

ஆதங்கத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான பின்னர், தமிழகத்திலுள்ள ஊடகங்கள், இதழ்கள் போன்றவை தனியார் பள்ளிகள்தான் திறமை மிக்கவை, அவற்றில் படித்த மாணவர்கள்தான் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கிவருகின்றன.

அதுபோல் தனியார் பள்ளிகள்தான் அதிக அளவிலான தேர்ச்சியைப் பெற்றுள்ளன எனவும் ஊடகங்கள் மட்டுமல்ல, தமிழக கல்வித் துறையின் உயர்நிலை அதிகாரிகளும் தெரிவித்து வருகின்றனர்.
ஊடகங்களும், பெற்றோர்கள் சிலரும் இத்தகைய கருத்தைத் தெரிவித்தால்கூட பரவாயில்லை. ஆனால், அரசுப் பள்ளிகளையும், அதில் பணிபுரிந்து வருகிற ஆசிரியர்கள் குறித்தும் உண்மையான நிலையை உணர்ந்திருக்கும் கல்வித் துறை உயர் அதிகாரிகளே இப்படிக் கூறினால், உண்மையான அக்கறையுடன் உழைத்து வரும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் செயல்பாடுகளில், உழைப்பில் பாதிப்பு வராதா?
பெரும்பாலான தனியார் பள்ளிகளில் (அனைத்து வகையான நர்சரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ. பள்ளிகள்) முதல் வகுப்பில் சேர்க்க வேண்டுமென்றால்கூட பெற்றோர்களின் கல்வியறிவுதான் மிக முக்கியமான விஷயமாக அத்தகைய கல்வி நிறுவனங்களால் விசாரிக்கப்படுகிறது.
பெற்றோர்கள் குறைந்தபட்ச கல்வியறிவு மட்டுமே உள்ளவரானால் அவர்களது குழந்தைகளின் சேர்க்கை என்பது குதிரைக் கொம்பாக மாறி விடுகிறது.
பெற்றோர்கள் படித்திருந்தால் மட்டுமே வீட்டில் பாடங்களை சொல்லித்தர முடியும் என்பது தனியார் கல்வி நிறுவனங்கள் கூறும் அறிவுரை.
அப்படி என்றால், பள்ளிக்கு செல்வது எதற்காக என்பது புரியவில்லை. மேலும், பெற்றோர்கள் படித்திருந்தாலும்கூட சம்பந்தப்பட்ட குழந்தையும் அதற்குரிய தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் அந்தத் தனியார் பள்ளியில் சேர முடியும்.
ஆனால், அரசுப் பள்ளியில் இது போன்ற அறிவைச் சோதிக்கும் தேர்வோ, பெற்றோர்களின் கல்வி அறிவை விசாரிக்கும் நிலையோ கிடையாது. எந்தவொரு மாணவ - மாணவியையும் அவர்களின் வயதுக்கேற்ற வகுப்புகளில் எவ்வித நிபந்தனையும் இன்றி சேர்க்க வேண்டும் என்ற நிலைதான் இன்றளவும் உள்ளது.
இப்படி தொடக்கப் பள்ளிகளில் தொடங்கும் மாணவன் தனது கல்வியை எவ்விதப் பிரச்னையும் இன்றி படித்து அரசு பொதுத் தேர்வுக்குள் நுழையும் போதுதான் பிரச்னை ஏற்படுகிறது.
அரசுப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு வரை தங்கு தடையின்றி தேர்ச்சி பெற்ற மாணவ - மாணவியரால் 10-ஆம் வகுப்புத் தேர்வையும் சாதாரணமான தேர்வாக எதிர்கொள்ளத் தோன்றுவதுதான் பிரச்னை.
9-ஆம் வகுப்பு வரை தடையின்றித் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இத்தேர்வு உளவியல்ரீதியான பயத்தை உருவாக்கி அவர்களின் தேர்ச்சியையும் பாதிக்கிறது.
ஆனால், சில தனியார் பள்ளிகளில் சரியாகப் படிக்காத மாணவரை 10-ஆம் வகுப்புத் தேர்வு எழுத அனுமதிக்காத நிலையுள்ளது. மேலும், சில பள்ளிகள் சரியாகப் படிக்காத மாணவரை 9-ஆம் வகுப்பிலேயே நிறுத்திவிடுவதும் அல்லது தனிப்பயிற்சிக் கல்லூரியில் சேர்த்து தனித் தேர்வராகத் தேர்வு எழுதச் செய்வதும் நடந்து வருகிறது.
இதை எல்லாம் தாண்டி தனியார் பள்ளிகளில் படிக்கும் ஒவ்வொருவரும் 10-ஆம் வகுப்புப் பாடத்தை 2 வருடங்கள் இடைவிடாது விடுதியில் தங்கிப் படிக்கும் நிலையும் உள்ளது.
மேலும், ஒவ்வொரு பாடத்துக்கும் அந்தப் பாடத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களைக் கொண்டு சிறப்புப் பயிற்சிகளும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு கிடைத்து வருகின்றன. இதற்கெல்லாம் எவ்வளவு லகரங்களை மாணவர்களின் பெற்றோர்கள் செலவிட்டிருப்பார்கள் என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம்.
ஆனால், அரசுப் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பில் அதற்குரிய பாடத்தைத்தான் மாணவன் படிக்க வேண்டும். இதை எல்லாம்விட பெரிய வருத்தமான விஷயம் என்னவென்றால், தேர்வு தொடர்பான விவரங்களைத் தெரிவிக்கப் பெற்றோர்களை அழைத்தால்கூட பெரும்பாலான பெற்றோர்கள் வருவதே இல்லை என்பதுதான்.
ஆனால், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் வலியச் சென்று தங்களின் குழந்தைகள் குறித்து விசாரிக்கும் நிலையுள்ளது.
ஒழுக்கம், மதிப்பெண் குறைவு என மாணவர்களைக் கண்டிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் படும் பாடுகளை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
அதுபோல, பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கே பிளஸ் 1-இல் இடம் வழங்குகின்றன தனியார் பள்ளிகள். ஆனால், அரசுப் பள்ளிகளில் பல முறை தேர்ச்சி பெறாத மாணவர்களையும்கூட முதல் பிரிவில் சேர்க்க வேண்டிய நிலை உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் மெதுவாகப் பயிலும் மாணவர்களையும் தேர்ச்சி பெறச் செய்ய அரசுப் பள்ளி ஆசிரியர்கள் எடுத்துக் கொள்ளும் அக்கறை யாருக்கும் (குறிப்பாக தனியார் பள்ளி ஆசிரியர்கள்) குறைவாகாது.
தகுதித் தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் வெற்றிபெற்று அரசுப் பள்ளிகளில் பணிக்குச் சென்றுள்ள ஆசிரியர்களின் (தனியார் பள்ளிகளில் அப்படி இல்லை) கைகளை சுதந்திரமாக கல்வித் துறை அவிழ்த்து விட்டால் போதும், அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விண்ணையும் தாண்டி விரியும் என்பது திண்ணம்.

No comments: