welcome message

Hearty Welcomes You

Always visit my site. If you want any news sms ON oommurugan to 9003798003

Flash News

Flash News:

popup.

Thursday, 19 January 2012

மாணவ மாணவிகளுக்கு கூடுதல் சீருடை, இலவச காலணி, புத்தகப்பை, பென்சில்கள் வழங்க முதல்வர் உத்தரவு


பள்ளி மாணவ மாணவிகளுக்கு கூடுதல் சீருடைகள், காலணிகள், புத்தகப்பைகள், ஆகியவற்றை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளும், தரமான கல்வியை, அடிப்படை உள்கட்டமைப்பான வசதிகள் நிறைந்த சூழ்நிலைகளில் பெறுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் ஜெயலலிதா எடுத்து வருகிறார்.

இதன் அடிப்படையில், 2012-13ம் ஆண்டில் தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள், நகராட்சி மற்றும் மாநகராட்சிப்பள்ளிகள் ஆகியவற்றில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., சத்துணவுத்திட்டத்தின் கீழ் 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இரண்டு சீருடைகளுடன் கூடுதலாக இரண்டு சீருடைகள் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 4 சீருடைகள் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும். 6ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு அரைக்கால் சட்டைக்கு பதில் முழுக்கால் சட்டையும், பெண்களுக்கு பாவாடை தாவணிக்கு பதில் சல்வார் கமீஸ் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 23 லட்சத்து 33 ஆயிரத்து 418 மாணவர்களும், 23 லட்சத்து 51 ஆயிரத்து 660 மாணவிகள் என மொத்தம் 46 லட்சத்து 85 ஆயிரத்து 078 மாணவ மாணவிகள் பயன்பெறுவார்கள். அரசுக்கு 259 கோடியே 95 லட்சம் ரூபாய் கூடுதலாக செலவு ஏற்படும்.

மேலும் 1 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா ஒரு காலணி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் 35 ஆயிரத்து 556 மாணவ, மாணவியர் ஒவ்‌வொருவருக்கும் 96 ரூபாய் மதிப்பில் ஒரு காலணியும், 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் 27 லட்சத்து 95 ஆயிரத்து 639 மாணவ மாணவியர் ஒவ்‌வொருவருக்கும் 127 ரூபாய் மதிப்பில் ஒரு காலணியும், 9 முதல் 10ம் வகுப்பு படிக்கும் 18 லட்சத்து 5 ஆயிரத்து 933 மாணவ மாணவியருக்கு 142 ரூபாய் செல்வில் ஒரு காலணியும் வழங்கவும், அதனை இந்த ஆண்டே வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு 94 ‌கோடியே 76 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும். இதன் மூலம் 81 லட்சத்து 2 ஆயிரத்து 128 மாணவ மாணவிகள் பயன்பெறுவார்கள்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு ஒரே மாதிரியான புத்தகப்பைகள், கற்றலுக்கு தேவையான ஜாமென்ட்ரி பாக்ஸ், கிராமப்புற மாணவ மாணவிகளுக்கு இதுவரை கிடைக்கப்பெறாத கலர் பென்சில்கள் மற்றும் புவியியல்படங்களை இந்த கல்வியாண்டு முதல் 2012-13 முதல் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி 1 முதல் 3ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கு 75 ரூபாய் மதிப்புள்ள புத்தகப்பைகளும், 4 முதல் 7ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு 100 ரூபாய் மதிப்புள்ள புத்தகப்பைகளும், 8 முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு 125 ரூபாய் மதிப்புள்ள புத்தகப்பைகளும் வழங்கப்படும். இதன் மூலம் 92 லட்சத்து 28 ஆயிரத்து 374 மாணவ மாணவியர்களும் பயன்பெறுவர். இதேபோல் 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் பயிலும் மாணவ மாணவிகளுக்கு 35 ரூபாய் மதிப்புள்ள ஜாமென்ட்ரி பாக்ஸ் வழங்கப்படும். இதனை இரண்டாண்டுகளுக்கு பயன்படுத்தலாம். இதனையடுத்து 6,8,10 வகுப்பு மாணவ மாணவியருக்கு ஜாமென்ட்ரி பாக்ஸ் வழங்கப்படும். இதனால் 46 லட்சத்து ஓர் ஆயிரத்து 572 மாணவ மாணவிகள் பயன்பெறுவர்.

1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு 20 ரூபாய் மதிப்புடைய கலர்பென்சில்கள் வழங்கப்படும். இதனால் 35 லட்சத்து 556 மாணவ மாணவியர் பயன்பெறுவார்கள். 6 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு 50 ரூபாய் மதிப்புள்ள புவியியல் வரை படங்கள் வழங்கப்படும். இதன் மூலம் 46, 01,572 மாணவ மாணவிகள் பயன்பெறுவார்கள். புத்தகப்பை, ஜாமென்ட்ரி பாக்ஸ், கலர்பென்சில்கள் மற்றும் புவியியல் வரைபடங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 92 லட்சத்து 28 ஆயிரத்து 374 மாணவ மாணவிகள் பயன்பெறுவார்கள். இதன் மூலம் 12-13ம் கல்வியாண்டில் 136 கோடியே 50 லட்ச ரூபாய் செலவு ஏற்படும்.

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவ பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபு வகுப்பை சேர்ந்த மாணவ மாணவிகள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையில் வழங்கப்படும் பரிசுத்தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. 10ம் வகுப்பில் முதல் பரிசாக 3 ஆயிரம் ரூபாயும், 2ம் பரிசாக 2 ஆயிரம் ரூபாயும, 3ம் பரிசாக ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 12ம் வகுப்பில் முதல் பரிசாக 6 ஆயிரம் ரூபாயும், 2ம் பரிசாக 4 ஆயிரம் ரூபாயும், 3வது பரிசாக 2 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். இதனால் அரசுக்கு 11 லட்சத்து 52 ஆயிரத்து ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.