இழுத்தடிப்பு ஏன்?தொடக்க கல்வித் துறைக்கு, வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு பெற்ற 1,155 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்குவதில், ஒன்பது மாதங்களாக பிரச்னை இருந்து வருகிறது.இவர்களில், 750 பேருக்கு மட்டுமே காலிப் பணியிடங்கள் உள்ளது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாகவே, புதிய ஆசிரியர்களை பணி நியமனம் செய்யும் விவகாரம், இடியாப்ப சிக்கலாக நீடித்துக் கொண்டிருக்கிறது.
நியமன ஆலோசனை:மே 31ம் தேதி, கணிசமான ஆசிரியர்கள் ஓய்வு பெறுவர் என்பதால், அதன் பின் புதிய ஆசிரியர்களை பணி நியமனம் செய்யலாமா என, துறை முதலில் ஆலோசித்தது.
ஆனால், ஐந்து மாதங்கள் வரை பணியிடம் வழங்காவிட்டால், பிரச்னை மேலும் பெரிதாகும் என்பதால், தற்போது புதிய முடிவை எடுத்துள்ளது.ஆறு, ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளில், பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டிய இடங்களில், இடைநிலை ஆசிரியர்களே பணியாற்றி வருகின்றனர். இவர்களை ஆரம்பப் பள்ளி வகுப்புகளுக்கு (1 முதல் 5 வரை) மாற்றிவிட்டு, அந்த இடங்களில், புதிய ஆசிரியர்களை நியமனம் செய்ய, துறை ஆலோசித்து வருகிறது.
இது குறித்து, மாவட்ட வாரியாக புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. சென்னையில் இன்று நடைபெறும், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் கூட்டத்தில், பணியிடங்களை இறுதி செய்வது குறித்து முடிவு எடுக்கப்படுகிறது.
பொங்கலுக்குள் நல்ல செய்தி:தொடக்க கல்வி இயக்குனர் சங்கரிடம், இந்தப் பிரச்னை குறித்து கேட்ட போது, ""புதிய பட்டதாரி ஆசிரியர்கள் தேவை உள்ள இடங்களை கண்டறிந்து, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களிடம், உரிய புள்ளி விவரங்களைப் பெற்றுள்ளோம். அதன் அடிப்படையில், பொங்கலுக்குள் புதிய ஆசிரியர்களுக்கு நல்ல செய்தி அறிவிக்கப்படும்,'' என்றார்.- ஏ.சங்கரன் -