welcome message

Hearty Welcomes You

Always visit my site. If you want any news sms ON oommurugan to 9003798003

Flash News

Flash News:

popup.

Tuesday 14 August 2012

50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 வினாத்தாள்

       டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2, தேர்வில் நடந்த முறைகேடு தொடர்பாக, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசுப் பள்ளி ஆசிரியரே முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதும் அம்பலமாகியுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வில் ஈரோடு, நாமக்கல் போன்ற பகுதிகளில் முறைகேடுகள் நடப்பதாக வந்த தகவல் வெளியானது. தர்மபுரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த, 43 தேர்வு மையங்களிலும் தீவிரமாகக் கண்காணிக்க, பறக்கும் படையினருக்கு, டி.ஆர்.ஓ., ராமர் உத்தரவிட்டார். அரூரை அடுத்த கம்பைநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தேர்தல் தனி தாசில்தார் கமலநாதன், துணை தாசில்தார் கருப்புச்சாமி ஆகியோர், தேர்வு அறைகளை கண்காணித்தனர்.அப்போது, வாலிபர் ஒருவர், கூடுதல் விடைத்தாள் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதை ஒப்பிட்டு பார்த்ததில், குரூப்-2 தேர்வுக்கான விடைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த வாலிபர், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார். முறைகேடு குறித்து, டி.ஆர்.ஓ., ராமருக்கு, அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

விலை என்ன?எஸ்.பி., அமீத்குமார் சிங் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், முறைகேட்டில் ஈடுபட்ட வாலிபர், அரூர் அடுத்த முத்தானூரைச் சேர்ந்த சீனிவாசன் மகன் சுரேஷ்குமார், 35, என்பது தெரிய வந்தது. இவர், வினாத்தாளை, திருவண்ணாமலை மாவட்டம், தானிபாடியில் உள்ள தன் தங்கை வீட்டின் அருகே இருந்த அரசுப் பள்ளி ஆசிரியர் விவேகானந்தனிடம், 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து பெற்றதாகக் கூறினார்.போலீசார், தானிபாடியில் உள்ள ஆசிரியர் விவேகானந்தனிடம் விசாரித்த போது, வினா மற்றும் விடைத்தாள்களை, திருவண்ணாமலையைச் சேர்ந்த ரங்கராஜ், குமார் ஆகியோரிடம் வாங்கியது தெரிய வந்தது. போலீசார், விவேகானந்தன், ரங்கராஜ், குமார் ஆகியோரை, கம்பைநல்லூர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.அப்போது, முத்தானூரைச் சேர்ந்த அருண், அரூரைச் சேர்ந்த பூபேஸ், மற்றொருக்கு நபருக்கும் விற்பனை செய்ததாக, அவர்கள் கூறினர். போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், சுரேஷ்குமார், விவேகானந்தன், ரங்கராஜ் ஆகிய மூன்று பேரையும், போலீசார் கைது செய்தனர். மற்றவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருக்கோவிலூர் ஆசிரியர்:


கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில், கையால் எழுதப்பட்டு ஜெராக்ஸ் எடுக்கப்பட்ட வினாத்தாள் மற்றும் அதற்கான விடைகள் அடங்கிய 15 பக்கங்கள் கொண்ட ஜெராக்ஸ் கிடந்ததாக, ராஜாகண்ணு என்பவர் கண்டெடுத்து கலெக்டரிடம் ஒப்படைத்தார். தனிப்படை போலீசார், திருக்கோவிலூர் அடுத்த திருவரங்கத்தைச் சேர்ந்த இடைநிலை ஆசிரியர் ரங்கராஜ், 40, என்பவரை நேற்று முன்தினம் இரவு கைது செய்து, விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.இவர், தேர்வு வினாத்தாளை ஒரு வாரத்திற்கு முன்னதாகவே பணம் கொடுத்து வாங்கி வந்து, ஜெராக்ஸ் எடுத்து விற்பனை செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குரூப்-2 கேள்வித்தாள் "லீக்'ஆனது எங்கே? குரூப்-2 கேள்வித்தாள் கட்டுகள், அச்சடிக்கப்பட்ட இடத்தில் இருந்து, தமிழகத்திற்கு வரும் வழியில் திருடப்பட்டிருக்கலாம் என, தேர்வாணைய வட்டாரங்கள் கருதுகின்றன.

பள்ளி பொதுத்தேர்வுக்கான கேள்வித்தாள்களாக இருந்தாலும் சரி, டி.ஆர்.பி., - டி.என்.பி.எஸ்.சி., போன்ற அமைப்புகள் நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான கேள்வித்தாள்களாக இருந்தாலும் சரி, எதுவுமே தமிழகத்தில் உள்ள அச்சகங்களில் அச்சடிக்கப்படுவதில்லை. பக்கத்து மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் தான், கேள்வித்தாள்கள் அச்சடிக்கப்படுகின்றன.அதன்படி, குரூப்-2 கேள்வித்தாளும், பக்கத்து மாநிலம் ஒன்றில் தான் அச்சடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேர்வுக்கும், அச்சகங்களை மாற்றுவது கிடையாது. குறிப்பிட்ட அச்சகங்களில் தான், கேள்வித்தாள் அச்சடிக்கப்படும். அச்சடித்து முடிக்கப்படும் கேள்வித்தாள்கள், பார்சல் செய்யப்பட்டு, சீலிடப்படும்.

பின், அங்கிருந்து நேரடியாக தேர்வு மையங்களுக்கோ அல்லது துறை தலைமை அலுவலகத்திற்கோ கொண்டு வரப்படுகிறது. இப்படி, அச்சகங்களில் இருந்து, தமிழகத்திற்கு வரும் வழியில், வாகனங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறதா என்ற கேள்விக்கு, தேர்வாணையம் தரப்பில் இருந்து சரியான பதில் இல்லை. எனவே, தமிழகத்திற்கு வரும் வழியில், கேள்வித்தாள் திருடப்பட்டிருக்கலாம் என, தேர்வாணையம் சந்தேகிக்கிறது.

ஈரோட்டில் சிக்கிய தனக்கொடி, தன் கணவர் செந்தில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு பயிற்சி நிலையத்தில் இருந்து, கேள்வி-பதில் அடங்கிய தாளை வாங்கி வந்ததாக தெரிவித்தார். குறிப்பிட்ட அந்த பயிற்சி மையத்தின் நிர்வாகியான ராசியப்பன், ஒரு காலத்தில் தேர்வாணையத்தில் வேலை பார்த்துள்ளார். எனவே, கேள்வித்தாள் எங்கு அச்சிடப்படுகிறது, எந்த வழியாக வருகிறது என்ற விவரங்கள் எல்லாம் அவருக்கு அத்துப்படியாக இருக்கும்.

மேலும், அவருக்கு தேர்வாணையத்தில் உள்ளவர்களுடன் தொடர்பு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த பின்னணியில், கேள்வித்தாள், "லீக்' ஆகியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து, தேர்வாணையம் முழு விசாரணை நடத்த உள்ளது. விரைவில் நியமிக்கப்பட உள்ள ஐந்து பேர் கொண்ட குழு, கேள்வித்தாள் தயாரிப்பில் துவங்கி, அச்சடித்து, தேர்வு மையங்களுக்கு கொண்டு சென்று வினியோகம் செய்தது வரை, ஒவ்வொரு இடத்திலும் என்ன நடந்தது என்பதை அங்குலம், அங்குலமாக அலசி ஆராய உள்ளது. அப்போது முழு விவரமும் தெரியவரும்.