வி.ஏ.ஓ., தேர்வுக்கு விண்ணப்பித்தோர் எண்ணிக்கை, 10 லட்சத்து, 74
ஆயிரமாக உயர்ந்தது. கடைசி நாளில் மட்டும், 1 லட்சத்து 23 ஆயிரம் பேர்
விண்ணப்பித்ததாக தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
வருவாய்த் துறையில், 1,800 வி.ஏ.ஓ.,
பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு, செப்., 30ல் நடக்கிறது.
இதற்காக, கடந்த மாதம், 9ம் தேதியில் இருந்து, டி.என்.பி.எஸ்.சி., இணையதளம்
வழியாக விண்ணப்பித்து வந்தனர். இதற்கான கடைசி தேதி, நேற்று முன்தினத்துடன்
முடிந்தது.இறுதி நிலவரப்படி, 10 லட்சத்து 74 ஆயிரம் பேர், இத்தேர்வுக்கு
பதிவு செய்துள்ளனர்.
இணையதளத்தில்
விண்ணப்பித்திருந்தாலும், 14ம் தேதிக்குள் தேர்வுக் கட்டணத்தை செலுத்த
வேண்டும். அப்படி, கட்டணம் செலுத்தாதவர்கள், தேர்வெழுத அனுமதிக்கப்பட
மாட்டார்கள்.
சார்பதிவாளர், நகராட்சி ஆணையர்
உள்ளிட்ட பதவிகளுக்கான, குரூப்-2 தேர்வு, மாநிலம் முழுவதும், 2,465
மையங்களில் இன்று நடக்கிறது. சென்னையில், 296 பள்ளி, கல்லூரிகளில்
தேர்வுகள் நடக்கின்றன. காலை, 10:00 மணி முதல், பிற்பகல், 1:00 மணி வரை
தேர்வு நடக்கிறது. இத்தேர்வை, 6.4 லட்சம் பேர் எழுதுகின்றனர்.