முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இனி எழுத்துத் தேர்வு மூலம் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. எனினும், 2010-11 ஆம் ஆண்டுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள 1,247 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. நடப்பாண்டுக்கு (2011-12) அறிவிக்கப்பட உள்ள பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலம் நிரப்பப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடியும் வரை இடைநிலை ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு அலுவலக மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த ஆண்டிலிருந்து தேர்வு செய்யப்படும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்தத் தகுதித் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. இந்த நிலையில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமன முறையை மாற்றி பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.எஸ்.ஸ்ரீதர் அரசாணை வெளியிட்டுள்ளார். அதன் விவரம்: வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் செய்யும் முறையை அரசு கவனத்துடன் பரிசீலித்தது. பரிசீலனைக்குப் பிறகு, முதுகலை ஆசிரியர் நியமனம் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் மேற்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, எழுத்துத் தேர்வு மூலம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று ஆணையிடப்படுகிறது. இந்த ஆணையை ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment