டி.என்.பி.எஸ்.சி., மூலம், 10 ஆயிரத்து, 105 காலி பணியிடங்களுக்கு, இந்த
ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. கடந்த ஆண்டை காட்டிலும், 8,000
பணியிடங்கள் குறைந்துள்ளன. காலியிடங்களை நிரப்புவதில், அரசு அதிகாரிகள்
அக்கறை காட்டாததால், அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் அதிர்ச்சி
அடைந்துள்ளனர்.
டி.என்.பி.எஸ்.சி., மூலம், இந்த ஆண்டு நடத்தப்படும்
தேர்வுகள் குறித்த அறிவிப்பு, சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், 27
துறைகளில் உள்ள, 35 பதவிகளுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு, மொத்தம், 10
ஆயிரத்து, 105 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி., மூலம், 18 ஆயிரம் பேர் நியமனம்
செய்யப்பட்டனர். கடந்த ஆண்டை விட, நடப்பாண்டில், 8 ஆயிரம் பணியிடங்கள்
குறைந்துள்ளன. 2 லட்சம் காலியிடங்கள் தமிழக அரசுத் துறைகளில் மொத்தம், 12
லட்சம் பணியிடங்கள் உள்ளன. இதில், சுமார், 2 லட்சம் காலி பணியிடங்கள்
இருப்பதாக, அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கூறுகின்றனர். ஆனால்,
டி.என்.பி.எஸ்.சி., மூலம், 10 ஆயிரத்து, 105 பணியிடங்களுக்கு மட்டுமே
தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., அதிகாரி
ஒருவர் கூறியதாவது: அரசுத் துறைகளில் காலி பணியிடங்கள் குறித்து, ஒவ்வொரு
துறையிலும் பட்டியல் கேட்கப்பட்டது. சில துறைகளின் அதிகாரிகள் மட்டுமே
கொடுத்தனர். காலியிடங்கள் பட்டியல் கொடுக்காமல், பல துறைகளில் தொடர்ந்து
காலதாமதம் செய்தனர். அவர்களுக்கு, போன் மூலமாகவும், நேரிலும் சென்று பல
முறை வலியுறுத்தியே, பட்டியலை பெற்றோம். 24 ஆயிரம் காலி பணியிடங்கள்
பட்டியல் கிடைக்கும் என, எதிர்பார்த்தோம். ஆனால், குறைந்த அளவு,
காலிப்பணியிட பட்டியல் மட்டுமே கிடைத்தது. எனினும், பல்வேறு அரசுத்
துறைகளில் இருந்து, தொடர்ந்து காலியிட விவரங்கள் வரும் என
எதிர்பார்க்கிறோம். அந்த இடங்களுக்கான தேர்வு அட்டவணை, தனியாக
வெளியிடப்படும் என்றும், தேர்வாணைய தலைவர் நடராஜ் தெரிவித்திருக்கிறார்.
எனவே, கடந்த ஆண்டு அளவிற்கு, மொத்த பணியிடங்கள் எண்ணிக்கை உயரும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
அரசுக்கு அக்கறை இல்லாதது ஏன்?
அரசு
ஊழியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: அரசு துறைகளில் ஏராளமான காலி
பணியிடங்கள் இருந்தாலும், அவற்றை நிரப்புவதில், தமிழக அரசு ஆர்வம்
காட்டுவது இல்லை. பல துறைகளில், ஓய்வு பெற்றவர்களுக்கே மீண்டும் ஒப்பந்த
அடிப்படையில் வேலை வழங்கப்படுகிறது. உதாரணமாக, கருவூலத் துறையில், ஓய்வு
பெற்றவர்களையே மீண்டும் பணியில் அமர்த்தியுள்ளனர். புதிதாக
நியமிக்கப்படுபவர்களுக்கு சம்பளம், படிகள் என, ஏராளமான சலுகைகளை வழங்க
வேண்டியுள்ளது. இது, அரசின் செலவினத்தை அதிகப்படுத்துகிறது. உலக வங்கியும்,
மத்திய அரசும், செலவினங்களை குறைத்தால் மட்டுமே மானியம் வழங்குவோம் என்று
மாநில அரசுகளை நிர்பந்திக்கின்றன. இதன் பிரதிபலிப்பு தான், அரசுத்
துறைகளில் காலி பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படுவது இல்லை. இதனால்,
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும் லட்கணக்கான
இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment