CPS எனப்படும் பங்களிப்பு
ஓய்வூதியத் திட்டம் நாடு முழுவதும் 1.1.2004 முதல் செயல்படுத்தப்பட்டு
தற்பொழுது 3 மாநிலங்கள் (கேரளா, மேற்கு வங்காளம், திரிபுரா) தவிர மற்ற
மாநிலங்களில் அமுல்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் கேரளாவில் வரும்
1.4.2013 முதல் பங்காளி ஓய்வூதியத் திட்டம் என அறிமுகப் படுத்தப்பட
இருக்கிறது.
இந்நிலையில் இத்திட்டத்தை எதிர்த்து நாடு
முழுவதும் பல்வேறு கட்டமாக போராட்டங்கள் பல்வேறு சங்கங்களால் நடத்தப்பட்டு
வருகிறது. ஆனால் இந்த மசோதாவை சட்டமாக்கப்பட்டு நிறைவேற்றியே தீர வேண்டும்
என்று மத்திய அரசு தீவிரமாக உள்ளது.
தற்பொழுது பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின்
பாதிப்புகள் மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கியுள்ளது. அது என்னவென்றால்
இத்திட்டத்தின் மூலம் ஓய்வுப்பெற்ற ஊழியர் அல்லது மரணமடைந்த ஊழியரின்
குடும்பங்களுக்கு இதுவரை இத்திட்டத்தினால் பிடித்தம் செய்த சந்தா
பணம், அரசின் பங்குத் தொகை மற்றும்
எந்தவித ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என்பது தான் அந்த
அதிர்ச்சியான தகவல். இத்திட்டத்தின் தீவிரத்தை அறிந்த சிலர் இதற்கான
விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு
வருகின்றனர். இதற்கிடையில் இதை திசை மாற்றும் விதமாக 30.08.2012 அன்றைய ஒரு
பத்திரிகை செய்தியில் அரசு அலுவலர் கழகத்தின் சி மற்றும் டி பிரிவின்
தலைவர் திரு. சவுந்திரராஜன் தலைமையில் நிர்வாகிகள் முதல்வரை சந்தித்து பேசி
உள்ளனர் என்றும், முதல்வர் உங்களுக்கு இனிப்பான செய்தி வரும் என
கூறியுள்ளார் என்றும், பழைய பென்சன் திட்டத்தை கொண்டு வருவது தான் அந்த
இனிப்பான செய்தி என்கின்றனர் அந்த ஊழியர் சங்க நிர்வாகிகள்.
இதுகுறித்து ஆசிரியர் சங்க மாநில அளவிலான
நிர்வாகி ஒருவரிடம் கேட்ட போது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இனிப்பான
செய்தி வரும் என்று கூறியுள்ளாரே தவிர CPSஐ விலக்கி கொண்டு பழைய
ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்படும் என கூறவில்லை என்றும் மேலும் CPSன்
தற்பொழுது நிலை குறித்து விரிவான விவரங்களை அளித்தார்.
28.03.2012 அன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில்
வழக்கு எண். WP (MD). 3802 / 2012 CPSக்கு எதிராக தொடக்கப்பட்டு அந்த
வழக்கு விசாரணைக்கும் எடுத்து கொள்ளப்பட்டு அரசு இரண்டு வாரத்திற்குள்
பதிலளிக்கமாறு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. ஆனால் 5 மாதங்கள் ஆகியும்
இன்று வரை அரசின் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை என்றும், ஆனால்
இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை நீக்க கோரி தொடுக்கப்பட்ட வழக்கில்
ஊதிய முரண்பாடுகள் களையும் குழுவின் தலைவரான அரசு செயலாளரிடமிருந்து பதில்
மனு தாக்கல் செய்யப்பட்டு அம்மனுவில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய
முரண்பாடுகள் குறித்த கோரிக்கைகளை பரிசீலித்து அரசிடம் பரிந்துரைகளை
அளிப்போம் என்று உறுதி அளித்துள்ளார் என்று சுட்டிக்காட்டுகிறார்.
நிலைமை இவ்வாறு இருக்க அரசு, அரசு
துறையிடமிருந்து அறிவிப்போ அல்லது எவ்வித பதிலும் வராத நிலையில்,
நிர்வாகிகளின் இச்செய்தி தன்னிச்சையாக விளம்பரத்திற்காக அளிக்கப்பட்டதாகவே
நாங்கள் கருதுகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் ஒரு ஆசிரியராக 7 வருடம் பணிபுரிந்து
தற்பொழுது எந்தவித ஓய்வூதியம் பெறாமல் மகாத்மா காந்தி தேசிய ஊராக வேலை
வாய்ப்பு உறுதித்திட்டத்தில் (100 நாள் வேலை) தினக் கூலி அடிப்படையில் வேலை
செய்து வருகிறார். அவரும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் W.P.(MD). 10178 /
2012 வழக்கு தொடுத்துள்ளார், அந்த வழக்கும் விசாரணைக்கு எடுத்து
கொள்ளப்பட்டு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றும் மேலும் அவர்
தெரிவித்தார். எனவே பங்களிப்பு ஓய்வூதியம் திட்டம் குறித்து எந்தவித பொய்
பிரச்சாரத்தை நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment