welcome message

Hearty Welcomes You

Always visit my site. If you want any news sms ON oommurugan to 9003798003

Flash News

Flash News:

popup.

Saturday 25 August 2012

6.53 லட்சம் ஆசிரியர்கள் எழுதிய தகுதி தேர்வு ரிசல்ட் வெப்சைட்டில் வெளியீடு: 2448 பேர் மட்டுமே தேர்ச்சி


சென்னை: ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ரிசல்ட் நள்ளிரவில் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 6.76 லட்சம் பேர் எழுதிய தேர்வில் வெறும் 2448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து, தேர்ச்சி பெறாதவர்களுக்கு அக்டோபர் 3ம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவோர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று 2009ம் ஆண்டு மத்திய அரசு சட்டம் இயற்றியது. இதனடிப்படையில், தமிழகத்தில் கடந்த ஜூலை 12ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் 1,027 தேர்வு மையங்களில் 6 லட்சத்து 76 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். 10 நாட்களுக்கு பிறகு இந்த தேர்வுக்கான ‘கீ ஆன்சர்‘ வெளியிடப்பட்டது. தகுதித் தேர்வு கேள்வித்தாள் ஏ, பி, சி, டி என்ற 4 பிரிவுகளில் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டது. ஆனால், ‘கீ ஆன்சர்‘ விடைகளில் குழப்பம் இருந்தது.
இதை எதிர்த்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட், ஆகஸ்ட் 10ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரியை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டது. விளக்கம் கொடுக்கும் வரை தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என்றும் உத்தரவிட்டது. ஆனால், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதற்கு கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. இதனால், தேர்வு முடிவு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. 

இதற்கிடையே, திருவண்ணாமலை மாவட்டம் மேல்மலையூரை சேர்ந்த அருள்ராஜ் என்பவர் ஐகோர்ட்டில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை தற்போது வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கை ஐகோர்ட் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இதையறிந்த ஆசிரியர் தேர்வு வாரியம், நேற்று நள்ளிரவு 2 மணியளவில் தகுதித் தேர்வு முடிவுகளை வாரிய இணையதளமான www.trb.tn.nic.inல் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. மொத்தம் தேர்வு எழுதிய 6.76 லட்சம் பேரில் வெறும் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இது ஆசிரியர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு மறு தகுதித் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி, சென்னையில் நிருபர்களிடம் இன்று கூறியதாவது: இடைநிலை ஆசிரியருக்காக நடத்தப்பட்ட தகுதித் தேர்வை (தாள்1) மொத்தம் 2 லட்சத்து 83 ஆயிரத்து 806 பேர் எழுதினர். இதில், 1,735 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 0.61 சதவீத தேர்ச்சி ஆகும். பட்டதாரி ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட தேர்வை (தாள்2) மொத்தம் 3 லட்சத்து 83 ஆயிரத்து 616 பேர் எழுதினர். இதில் 713 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 0.19 தேர்ச்சி ஆகும். இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் இரண்டையும் சேர்த்து மொத்தம் 2,448 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 1680 பேர் பெண்கள், 768 பேர் ஆண்கள். தேர்ச்சி பெற்றவர்களில் யார் அரசு பணியில் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இது குறித்து கணக்கிடப்பட்டு வருகிறது. அரசு பணியில் இல்லாமல் தேர்ச்சி பெற்றிருப்பவர்களுக்கு அரசு பள்ளிகளில் ஆசிரியர் வேலை உடனடியாக வழங்கப்படும்.

தேர்ச்சி பெறாத சுமார் 6.74 லட்சம் பேருக்கு அக்டோபர் 3ம் தேதி மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கி மறுதேர்வு நடத்தப்படும். இத்தேர்வுக்கு அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. கட்டணம் எதுவும் செலுத்த வேண்டாம். விண்ணப்பித்த அனைவரும் தேர்வு எழுதலாம். புதிதாக யாரும் தேர்வு எழுத முடியாது. கடந்த முறை தேர்வு எழுதியவர்கள் நேரம் குறைவாக உள்ளதாக கூறியிருந்தனர். இதைத் தொடர்ந்து அக்டோபர் 3ம் தேதி நடக்கும் மறுதேர்வுக்கு கூடுதலாக ஒன்றரை மணி நேரம் வழங்கப்பட்டு, மொத்தம் 3 மணி நேரம் தேர்வு நடத்தப்படும். இவ்வாறு சுர்ஜித் கே.சவுத்ரி கூறினார்.  ஆசிரியர் தகுதித் தேர்வின் அடிப்படையில் 18,000 பட்டதாரி ஆசிரியர்களும், 5 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்பட முடிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தேர்ச்சிக்கான கட்ஆப் மதிப்பெண் குறைக்கப்படுமா? 
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 150 மதிப்பெண்களுக்கு 90 மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால்தான் அதிக அளவில் ஆசிரியர்கள் தோல்வி அடைந்துள்ளனர். எனவே, மீண்டும் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சிக்கான கட்ஆப் மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் என்று தேர்வர்கள் மத்தியில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதை ஏற்று, தேர்ச்சிக்கான கட்ஆப் மதிப்பெண்ணை குறைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். 

முதல் 3 இடங்களை பெண்களே பிடித்தனர்
இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் பொள்ளாச்சியை சேர்ந்த திவ்யா 150க்கு 122  மதிப்பெண் பெற்று முதல் இடத்தையும், திண்டுக்கல் சவீதா, திருச்சி சோபனா ஆகியோர் தலா 116 மதிப்பெண் பெற்று அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளனர்.

பள்ளிகளுக்கு விடுமுறை
ஆசிரியர்களுக்கு மறு தகுதித் தேர்வு நடத்தப்பட உள்ள அக்டோபர் 3ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: