ஆசிரியர்
கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தை, மாநிலக் கல்வி ஆராய்ச்சி
பயிற்சிக் குழுமமாக தரம் உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த
ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, "ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும்
பயிற்சி இயக்ககத்தை (டைரக்டரேட் ஆப் டீச்சர் எஜுகேஷன் ரீசர்ச் அண்டு
டிரெய்னிங்), மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமமாக (ஸ்டேட்
கவுன்சில் ஆப் எஜுகேஷன் ரீசர்ச் அண்டு டிரெய்னிங்) தரம்
உயர்த்தப்படும்,&' என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்த,
இப்போது தமிழக அரசு அரசாணையாகப் பிறப்பித்துள்ளது.
அரசாணை
கூறுவது என்ன? அதிகரித்து வரும் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களை கருத்தில்
கொண்டு, கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில், ஆந்திரா, கேரளா, கர்நாடகா
மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில், மாநிலக் கல்வி ஆராய்ச்சி
பயிற்சிக் குழுமம் அமைக்கப்பட்டுள்ளது சுட்டிக்காட்டப்பட்டது. இதுபோன்ற ஒரு
நிறுவனம், தமிழகத்தில் இல்லை என்பதால், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும்
பயிற்சி இயக்குனர் அளித்த பல்வேறு பரிந்துரைகள் அனைத்தும் ஏற்கப்படுகின்றன.
தற்போது,
கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டியது அவசியம் என்பதால், ஆசிரியர் கல்வி
ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகம், மாநிலக்கல்வி ஆராய்ச்சி பயிற்சிக்
குழுமமாக தரம் உயர்த்தப்படுகிறது. என்.சி.இ.ஆர்.டி., அமைப்புக்கு இணையான
தரத்துடன், எஸ்.சி.இ.ஆர்.டி., என்ற இந்த அமைப்பு செயல்படும்.
*
அனைவருக்கும் கல்வித் திட்டம், பள்ளிக் கல்வி இயக்குனரகம் மற்றும் மத்திய
இடைநிலைக் கல்வித் திட்டம் ஆகியவற்றின் கீழ், தனித்தனியே ஆசிரியர்களுக்கு
அளிக்கப்பட்டு வந்த பயிற்சிகள் அனைத்தையும், இனி மாநிலக்கல்வி ஆராய்ச்சி
பயிற்சிக் குழுமமே நடத்தும்.
*
கல்வி ஆராய்ச்சி மற்றும் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கத்தில், அதற்கேற்ப
பயிற்சிகளை, மாநிலக் கல்வி ஆராய்ச்சிக் குழுமம் வழங்கும். இதற்கென,
பயிற்சித் திட்டங்களை மாற்றி அமைத்து, மேம்படுத்தப்பட்ட திட்டங்களையும்
இந்நிறுவனம் உருவாக்கும்.
* தொடக்கக் கல்வி, இடைநிலைக் கல்வி மற்றும் மேல்நிலைக் கல்வி ஆகியவற்றுக்கான பாடத்திட்டங்களை, இனி இந்நிறுவனமே உருவாக்கும்.
* அனுமதிக்கப்பட்ட பாடத்திட்டங்களை பின்பற்றி, மாதிரி பாடப் புத்தகங்களையும் உருவாக்கும்.
*
இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் என, அனைத்து வகை
ஆசிரியர்களுக்கும், இனி மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சிக் குழுமமே
பயிற்சிகளை அளிக்கும். வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவில் நடக்கும்
அனைத்து வகையான பயிற்சிகளையும், இந்நிறுவனம் கண்காணிக்கும்.
*
மாநில பள்ளிக் கல்வி இயக்குனரகம், பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னார்வத்
தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றுடன் இணைந்து, கல்வித்துறைக்குத் தேவையான
ஆலோசனைகள் பெறப்பட்டு, அவை அமல்படுத்தப்படும்.
*
மாநில அளவில், மாணவர்களுக்கு திறனறிதல் திட்டங்களை செயல்படுத்தி, அவர்களின்
தனித்திறன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களை மேம்படுத்த நடவடிக்கை
எடுக்கப்படும். தொழில்துறை நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு, தொழிற்கல்வி
படிக்கும் மாணவர்களுக்குத் தேவையான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
மாநில
கல்வி ஆராய்ச்சி பயிற்சி குழுமத்தின் இயக்குனர் தேவராஜன் கூறியதாவது:
ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி இயக்குனரகத்தின் தரம் உயர்த்தப்பட்டுள்ளதால்,
கூடுதலாக இரு இணை இயக்குனர் பணியிடங்கள் தரப்பட்டுள்ளன.
மேலும்,
பயிற்சி அளிப்பது உள்ளிட்ட திட்டச் செலவுகளுக்காக, ஆண்டுதோறும் தொடரும்
செலவினமாக, 1 கோடியே 16 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு
செய்துள்ளது அரசு.
தற்போதைய
நிலையில், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு எந்த வகையான
பயிற்சிகள் தேவைப்படுகின்றன என்பது குறித்து, ஆராய்ந்து வருகிறோம். இந்தப்
பணிகள் முடிந்தபின், புதிய பயிற்சித் திட்டங்கள் தயாராகிவிடும். இவ்வாறு
தேவராஜன் கூறினார்.