welcome message

Hearty Welcomes You

Always visit my site. If you want any news sms ON oommurugan to 9003798003

Flash News

Flash News:

popup.

Saturday, 23 July 2011

என் தேசத்தை நாசமாக்கிய ஒரே சொல்... இலவசம்!


      பசியில் வாடுபவனுக்கு மீனைக் கொடுக்காதே... மீன் பிடிக்கக் கற்றுக்கொடு!'' என்கிற மேலை நாட்டுப் பொன்மொழி இந்த ஏழை நாட்டுத் தலைவர்களுக்கு ஏன் புரியாமல்போனதோ?

தொலைக்காட்சி இலவசம், உடுப்பு இலவசம், அடுப்பு இலவசம் என அனுதினமும் ஓர் அறிவிப்பை வெளியிட்டு, கையேந்தும் பெரு​மக்களை பெருக்கிக்கொண்டே போ​கிறது இந்த அரசாங்கம்.

65 ஆண்டு கால சுதந்திரத்தில், 45 ஆண்டுகள் இந்தத் தாய்த் தமிழகத்தை திராவிட இயக்கங்கள் ஆண்டிருக்​கின்றன. இன்றைக்கு இலவ​சத்தை மகத்தான திட்டமாக வாய் வலிக்​கச் சொல்பவர்கள், இத்தனை காலங்கள் ஆண்டும் என் மக்களைக் கையேந்த​வைத்த கயமைக்குப் பொறுப்பு ஏற்பார்களா?



கலைஞரின் 'இளைஞன்’ படம் தமிழ்த் திரையுலகத்தின் புரட்சியாய், புகழாரக் கூட்டத்தால் கொண்டா​டப்படுகிறது. மாக்ஸிம் கார்க்கியின் 'தாய்’ நாவலை, தாய்க் காவியமாக வடித்த முதல்வர் பெருமகனாருக்குச் சொல்கிறேன்... அய்யா, கார்க்கியின் எழுத்துகள் மேல் நீங்கள்கொண்டு இருக்கும் ஈர்ப்பும் பிரியமும் என்னை வியக்கவைக்கிறது. கார்க்கி எழுதிய சாலச் சிறந்த வாக்கியம் ஒன்றை உங்களுக்குச் சொல்கிறேன்.

'பிச்சை போடுபவனைக் காட்டிலும் அருவருக்கத்தக்கவன் யாரும் இல்லை. பிச்சை எடுப்பவனைக் காட்டிலும் பரிதாபத்துக்கு உரியவன் யாரும் இல்லை!’

கார்க்கியின் எழுத்துகளைப் பல சந்தர்ப்பங்களில் புகழ்ந்து உரைத்திருக்கும் நீங்கள், இந்த வரிகளுக்கு என்ன அய்யா பதில் சொல்ல முடியும்? உடனே, பிச்சைக்கும் இலவசத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது என வழக்கம்போல் விளக்கப் புராணம் பாடாதீர்கள். தனி மனிதனுக்குப் போட்டால் பிச்சை... தமிழ்நாட்டுக்கே போட்டால் இலவசமா? எங்களின் பணத்தை எங்களுக்கே பிச்சையாக்கும் வித்தையை இத்தனை காலம் நீங்கள் பயன்படுத்தாமல் இருந்ததே ஆச்சர்யம்தான்.

இலவசத் திட்டங்களுக்காக அரசாங்கம் இழக்கும் தொகையை நீங்கள் எதன் மூலமாக ஈடுகட்டுகிறீர்கள்? மது விற்பதன் மூலமாக... ஏழைக் குடியானவன் சாராயம் காய்ச்சினால், சட்டப்படி அது குற்றம். அரசாங்கமே சாராயம் காய்ச்சினால், அது திட்டம். நல்லா இருக்கிறதய்யா உங்கள் நியாயம்? தீபாவளி தினத்தில் மட்டும் 90 கோடிக்கு சாராயம் விற்றதாக இந்த அரசாங்கம் சாதனை அறிக்கை வெளியிடுகிறது. வயிற்றுக்கு விஷம் வைத்துவிட்டு, வாய்க்கு உணவு கொடுப்பதுதான் உங்கள் சாதனையின் மகத்துவமா அய்யா?

இலவசம் என்றால் என்ன பொருள் உங்கள் அகராதியில்? பல்துறைப்பட்ட வருமானத்தின் அரசுத் திட்டங்களைச் செயல்படுத்தியதுபோக, மீதம் இருக்கும் உபரி வருமானத் தொகையை வைத்து மக்களுக்கு ஏதாவது வழங்​கினால் அதற்குப் பெயர்தான் இலவசம். ஆனால், 80 ஆயிரம் கோடியை தமிழகத்தின் கடனாக ஏற்றிவைத்துவிட்டு, இழுத்துக்கோ பறிச்சுக்கோ என்கிற நிலைமையிலும், இலவசத்தை வழங்கினால், அதற்கு உண்மையான அர்த்தம் 'உள்நோக்கம்’ என்பதுதானே!

உடனே அறிவார்ந்தவரும் மூத்த அமைச்சருமான அய்யா அன்பழகனார் அறிவிக்கிறார்... 'தமிழக அரசின் 80 ஆயிரம் கோடி கடன் தமிழக மக்களைப் பாதிக்காது!’ அப்படி என்றால், எங்களின் கடனை கன்னடக்​காரன் கட்டுவதாகச் சொல்லி இருக்கிறானா? இல்லை தெலுங்குக்காரன் திரட்டிக் கொடுப்பதாகச் சொல்லி இருக்கிறானா?

இலவசங்கள் தொடர்ந்துகொண்டே போகட்டும்... என்றைக்கோ ஒரு நாள் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, இலவசங்களைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டால், தமிழகத்தின் நிலை என்னாகும் என்பது உங்களின் புத்திக்குப் புலனாகவில்லையா முதல்வரே?

இலவசம் இல்லாமல் போனால், பிறர் சவம் என்றாலும், பிய்த்துத் தின்னும் நிலை வந்துவிடாதா? இத்தனை காலம் உண்டபடியே உறங்கியவனை, ஒரே நாளில் உழைப்புக்குப் பழக்கப்படுத்திவிட முடியுமா? கொலை, கொள்ளை, வழிப்பறி என இந்த நாடே சுடுகாடாகிவிடாதா? அப்படி ஒரு நிலை வரத்தானே இத்தனை இலவசங்களை அறிவித்து, எம்மக்களின் சொரணைக்குச் சுருக்குப் போட்டுவிட்டீர்கள்?

தேர்தல் நெருங்க... நெருங்க... எப்படி எல்லாம் இலவசங்களை அறிவிக்கலாம் என மூளையைக் கசக்கி முப்பொழுதும் யோசிக்கிறீர்கள். வாரம் ஐந்து முட்டை என அறிவித்து குழந்தைகளைக் குதூகளிக்க​வைத்தீர்கள்... இத்தனை காலம் ஒரு முட்டை போட்ட கோழிகள் திடீரென ஐந்து முட்டைகள் போட ஆரம்பித்துவிட்டதா அய்யா? நாலரை ஆண்டு காலம் ஏழைகள் எந்தக் குடிசையில் வாழ்ந்தாலும் சரி என நினைத்த நீங்கள், இப்போது திடீரென வீடு வழங்கும் திட்டத்துக்கு வித்திட்டு இருக்கிறீர்கள். கடகட வேகத்தில் மூன்று லட்சம் வீடுகளைக் கட்டவைக்கும் நீங்கள், அடுத்த மூன்று லட்சம் பேருக்கு வீடு கட்டிக் கொடுப்பதற்கான ரசீதைக் கொடுத்து இருக்கிறீர்கள். 'எங்கள் ஆட்சி மீண்டும் வந்தால், உங்களுக்கு வீடு நிச்சயம்!’ என்பதை ஏழைகள் மனதில் எவ்வளவு சூசகமாக ஏற்றி இருக்கிறீர்கள் பார்த்தீர்களா? அடிக்கத் திட்டமிட்டு இருக்கும் கொள்ளையில் மக்களையும் மறைமுகப் பங்குதாரர்களாக மாற்றுவதற்குத்தானே இலவசம் என்கிற பெயரில் இந்தக் கையூட்டு?

ஆனால், உங்கள் நெஞ்சத்தில் கைவைத்துச் சொல்லுங்கள்... இலவசமாக்கப்பட்டு இருக்க​வேண்டி​யது கல்வியும், மருத்துவமும்தானே... ஏழைக்கு ஓர் உயிர்; பணக்காரனுக்கு ஓர் உயிர் என்கிற பாராமுக நிலைப்பாடுதானே இன்றுவரை தொடர்கிறது. கல்வி ஏற்றத்தாழ்வுகளை இன்று வரை இந்த அரசாங்கத்தால் களைந்து எடுக்கமுடியாமல் போனது ஏன்?

ஒரு ரூபாய்க்கு அரிசி போட்டு, 'உழைப்பு தேவை இல்லை!’ என்கிற சோம்பேறித்தனத்தை விதைப்புச் செய்தீர்கள். புத்தியை மழுங்கடிக்க இலவசத் தொலைக்​காட்சி கொடுத்தீர்கள். எவன் வீட்டில் இழவு விழுந்தாலும் தன் வீட்டில், 'மானாட மயிலாட’ ஆடினால் சரி என்கிற சாக்கடை எண்ணத்துக்குள் ஒவ்வொரு தமிழனையும் தள்ளினீர்கள். உங்களின் இலவசம் ஏற்படுத்திய பாதிப்பு என்ன என்பதை காவிரிக் கரையோர விவசாயிகளிடம் கேட்டுப் பாருங்​கள்... கூலிக்கு வேலை இல்லாமல் திண்டாடிய காலம் போய், வேலைக்கு ஆள் இல்லாமல் அல்லாடும் காலம் உருவாகி இருக்கிறது. இது ஆரோக்கியமான மாற்றம் அல்ல அய்யா... அயோக்கிய மாற்றம்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் விவசாய மாவட்டங்​களில் பட்டினிச் சாவுகள் தொடர்ந்தபோது, அரசாங்கமே சோறு போடும் என அறிவித்தார் அன்​றைய முதல்வர் ஜெயலலிதா. கூட்டுப் பொறியலோடு குக்கிராமங்கள்தோறும் சாப்பாடு தயாரானது. அப்போது நீங்கள் சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா அய்யா... ''ஊருக்கே படியளந்த மக்களை சோற்றுக்குக் கையேந்த வைத்துவிட்டார் ஜெயலலிதா!''

அந்த அம்மையாரின் நிலைப்பாட்டை நான் நியாயப்​படுத்தவே இல்லை. ஆனால், அன்றைக்கு எம் விவசாய வர்க்கம் கையேந்தியதைக் காணச் சகிக்காத நீங்கள், இன்​றைக்கு ஒரு ரூபாய்க்கு அரிசி போடுகிறீர்களே... நீங்கள் அரிசி போட்டால், அது மகத்தான திட்டம்... அந்த அம்மையார் ஆக்கிப்போட்டால் அது குற்றமா?

நாவைச் சுழற்றியே நாட்டைச் சுழற்றும் உங்களின் அபூர்வ ஆட்சியை மீண்டும் தக்கவைக்க நீங்கள் தீட்டி வரும் சில திட்டங்கள்பற்றிக் கேள்விப்பட்டேன். 'ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஓர் அலைபேசி இலவசம்’ என அறிவிக்கப்போகிறீர்களாமே... தொலைக்காட்சியை இலவசமாக வழங்கி இணைப்புக்கு எங்களிடமே பணம் பறித்ததைப்போல, அலைபேசியை இலவசமாக வழங்கி இணைப்புக்கு எந்த நிறுவனத்திடம் பேசி வைத்திருக்கிறார்களோ?

உலகத்தில் தமிழகத்தைத் தவிர வேறு எங்கேயுமே சுய மரியாதைக்கு கட்சி தொடங்கியதாகவோ, தன்​மானத்துக்காக இயக்கம் தொடங்கியதாகவோ, சரித்திரம் இல்லை. ஆனால், இன்றைக்கு அவமரியாதையின் அடை​யாளமாகவும், அவமானத்தின் சின்னமாகவும் எம் மக்கள் மாறிக்கிடக்கிறார்களே... அடுப்பு இலவசம், உடுப்பு இலவசம், மின்சாரம் இலவசம், சம்சாரம் இலவசம் (இலவசத் திருமணங்கள்), முட்டை இலவசம், சட்டை இலவசம் என அள்ளி வழங்கும் இந்த அரசாங்கம் தேர்தல் நெருங்குவதால் சீக்கிரமே இன்னொரு இலவசத்தையும் அறிவிக்கப் போகிறது. இனமானம் மிகுந்த தன்மானம் தளும்பிய தமிழர் பெருமக்களே... அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனாலும், காத்திருங்கள்... 'இல்லங்கள் தோறும் பிள்ளைகளும் இலவசம்!’

No comments: