welcome message

Hearty Welcomes You

Always visit my site. If you want any news sms ON oommurugan to 9003798003

Flash News

Flash News:

popup.

Tuesday, 6 December 2011

ஆதிதிராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு உணவுக் கட்டணம்-ஜெ. கூடுதல் நிதி

சென்னை:  பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ-மாணவியருக்கு வழங்கப்பட்டு வரும் உணவுக் கட்டணத்தை அதிகரித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்காக அவர் கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,

’’கற்றவர் கண்ணுடையர்; கல்லாதவர் புண்ணுடையர்; என்ற வள்ளுவனின் வாய் மொழிக்கேற்ப, அனைத்து குழந்தைகளையும், குறிப்பாக, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் மற்றும் ஆதி திராவிட இனத்தைச் சார்ந்த குழந்தைகளை கல்லாமை என்ற இழிவிலிருந்து காப்பாற்றும் வகையில் கல்வி கற்பதற்கான சூழலை ஏற்படுத்தும் வகையில் தங்கும் விடுதிகளை உருவாக்குதல்; சத்தான உணவு வழங்குதல், சில்லறை செலவினங்களுக்கான உதவித் தொகை வழங்குதல் போன்ற பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகள் மற்றும் உண்டு உறைவிடப்பள்ளிகளில் தங்கி பயிலும் மாணவ-மாணவியருக்கான உணவுக் கட்டணம் 450/- ரூபாயிலிருந்து 650/- ரூபாய் ஆகவும், கல்லூரி மாணவ, மாணவியருக்கான உணவுக் கட்டணம் 550/-ரூபாயிலிருந்து 750/- ரூபாயாகவும் உயர்த்தி வழங்க மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள். இதனால் இவ்விடுதிகளில் தங்கி பயலும் 1,20,015 மாணவ-மாணவியர் பயன் பெறுவர்.

மேலும் இவ்விடுதிகளில் புதியதாக உருவாக்கப்பட உள்ள 1,500 கூடுதல் இருக்கைகளுக்கும் இந்த உணவு கட்டணங்கள் வழங்கப்படும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள் நடத்தும் மாணவர் இல்லங்களில் தங்கி பயிலும் 5,438 மாணவ மாணவியருக்கும் உயர்த்தப்பட்ட உணவு கட்டணங்களை வழங்கிட முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.

இதற்காக அரசுக்கு ஆண்டு தோறும் 25 கோடியே 19 லட்சத்து 93 ஆயிரத்து 600 ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும். தமிழ் நாட்டில் உள்ள 1238 விடுதிகளில் தங்கிப் பயிலும் 74,302 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபின மாணவ, மாணவியர் பயன் பெறும் வகையில், தற்போதைய உயர்ந்து வரும் உணவுப் பொருட்களின் விலையினை கருத்தில் கொண்டு அரசு விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ மாணவியருக்கான மாதாந்திர உணவு கட்டணத்தை 450/- ரூபாயிலிருந்து 650/- ரூபாயாகவும், கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கான உணவு கட்டணத்தை 550/- ரூபாயிலிருந்து 750/- ரூபாயாகவும் உயர்த்தி, முதல்- அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 15 கோடியே 32 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.

அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் விடுதிகளில் தங்கிப்பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு கட்டணத்தை 450/- ரூபாயிலிருந்து 650/- ரூபாயாக உயர்த்தி வழங்கவும் முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இதன் மூலம், 39 தனியார் விடுதிகளில் தங்கி படிக்கும் 1,948 பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின வகுப்பு மாணவ, மாணவியர்கள் பயன் பெறுவர். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 38 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் செலவு ஏற்படும்.

அரசின் இந்த நடவடிக்கைகளினால் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், சீர்மரபினர், ஆதி திராவிடர்/பழங்குடியினர் ஆகிய பிரிவுகளைச் சார்ந்த மாணவ, மாணவியர் மிகவும் பயன் பெறுவர். இதனால் பள்ளி, கல்லூரி செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், இடையில் படிப்பினை விட்டுச் செல்பவர்களின் எண்ணிக்கை முற்றிலுமாக குறையவும் வாய்ப்புள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: